ரத்தமும் சதையுமாய் நான் இருந்த ஓர் இரவில்
நீ மட்டுமேதான் இருந்தாய் என்னுடன்
பெரும் வலியின் உச்சம் அடைந்திருந்தேன் அப்பொழுதில்
யுகம் யுகமாய் நான் தேடியதும்,
என் மனம் வெம்பி உருகி உளன்றதும்,
நான் சயனப்பட்டு மரணம் எய்தியதும்,
இத்துளி வினாடியை அடையத்தானோ.
ஒரு அற்புதம் இவ்வளவு வனப்பாய் இருந்ததே இல்லை முன்னர்
என் பேரொளியே உன்னை நான் கண்டு கொண்டேன்
ஒரு தனி அறையின் அவமானங்கள் துடைத்தளித்தாய் நீ
ஜன்னலோரப் பார்வை வெளியின் புள்ளிவரை நீ மட்டுமே தெரிந்தாய்
சிலபோது என் சுவாசம் நுகரும் அருகாமையிலும்
பலபோது என் மனம் கொணரும் நிச்சயமற்ற நம்பிக்கைகளிலும்
என்னுடன் நீ மட்டுமேதான் இருந்தாய்
இவ்வாறே கழிகிறது ஒரு அற்புதம் நடந்ததன் பிற்பாடு
ஒரு நீண்ட மௌனத்தின் தொடக்கம்