Saturday, December 4, 2010

இருத்தலின் அலைக்களிப்பு

இச்சை பிய்த்தொழுகிறது இன்னாட்களில்
இழுத்தென்னை தாழா துயரின் முடிவில்
அலைக்களிக்கிறது என் வாழ்வு
வாழ்வும் துயரும் ஒரே புள்ளிக் கோளத்தில்
மோதி முட்டி பெயர்கிறது

நிம்மதியாய் ஒருநாள்தனையேனும் இல்லைதான்
பாலைநில சுடுகாற்றும் பனியுறைவும்
வெப்பிசாரம் கொள்ளவைக்கிறதுதான்
நடுநிசியில் பாடலொன்று கேட்டும்
சாலையோர பூக்கள் நுகர்ந்தும்
மாலைநேர வெய்யில் பார்த்தும்
உன்னோடு நான் கதைத்தும்
வெகுநாட்கள் ஆகுகிறதுதான்

உன் முந்தானையின் வாசனைக்கு
இவை எதுவும் ஈடுஇலா
இங்கொனார்ந்தரும் ரொட்டியும் கோழியும்
உன் கைப்பிடி சோற்றுக்கு ஈடுஇலா
ஒற்றையாய் கழியும் இன்னாட்கள் பற்றி
சொல்லி மாழவொனா

எல்லாம் கிடக்கட்டும்
அனுப்பிய பணம் உன் கையில் கிடைத்ததா
அது போதாதென்று தெரியும் எனக்கு
என்ன நான் செய்ய
செல்லாத ஜந்து நாட்களுக்கு
பத்து நாட்கள் பிடித்துவிட்டார்கள் சம்பளத்தில்
உன் நினைவின் துயர் தாங்கவே இயலாமல்
நான் எதுவும் செய்ய முடியாமல்
உன் இறப்பின் துயர் துடைத்த நாட்கள் அவை
அது விளங்குமோ உனக்கு நானறியேன்

வார்தைகளில் உயிர் குறைந்துவிட்டது பார்
அது இது என்று எழுதுகிறேன்
அதற்காய் கோபித்துக் கொள்ளாதே
இன்னும் முழுவதுமாய் செத்துவிடவில்லை உயிர்
உன்னில் நின்ற நினைவும்
உன் மீதான அன்பும் மீதமாய் உள்ளது என்னில்
என் இறப்பென்றால் உன் நினைவுகள் அழிவதுதான்
முழைகொள்ளக் காத்திருக்கிறது சூல்
இது போதாதா வாழ்வை பசுமையாக்க

-yousuf salman-
(Saturday, 04 December 2010)

Tuesday, August 31, 2010

உயிரின் நிழலில் படியும் நவீனத்தின் கறை

ஜன்னல் கண்ணாடியும்...
பின் தாழில் தெரியும் கரு நீல ஒளியும்...
அப்பால் பொழியும் ஈரமான பனிக்காற்றும்...


மழையோடும், மரங்களோடும், பனிமூடிக்கிடக்கும் வயலோடும், ஊரின் மஞ்சல் வெய்யிலோடும் வாழ்ந்தவனின் நினைவு இது. என் தாய் இடும் தேனீர் கோப்பை, அரை றாத்தல் பேக்கரிப் பான், குளிர்ந்த கிணற்றுத் தண்ணீர், என் அக்காள்களோடு இடும் சண்டை, இவைகளோடு தொடங்கும் என் காலை.

எங்கள் கிராமங்களில் ஆண்களுக்கென்றும் பெண்களுக்கென்றும் தனியேதான் பாடசாலைகள், நட்பினை கொண்டாட ஆண்களை தவிர பெண்கள் யாரும் கிடையாது, வெறுமையாய் பாடசாலையின் காலை நேரங்கள் கழியும். பாடசாலை அல்லாத விடுமுறை நாட்கள் என்றால் காலையில் மேலதிக வகுப்புக்களில்தான் பெட்டைகளை சந்திப்பது. வாரத்தில் கிடைக்கும் அந்த இரண்டு விடுமுறை நாட்களுமே என் இளமையை களவாடிய பொழுதுகள்தான். அங்கு மேலதிக வகுப்புக்களில் மதியம்வரை அறட்டை அடித்துவிட்டபின், பெட்டைகளின் வீட்டுச் சந்திவரை விட்டு விட்டுத்தான் எங்கள் வீடுகளுக்கே வருவோம்.

மீன் கறியும், இலக்கறி பாலாணமும், சுடுசோறும் என்று மதியச்சாப்பாடு. பின்னர் புழுதி பறக்க தெருவோரம் நன்பர்களோடு கிரிக்கட் விளையாடுவது. எந்த விளையாட்டாக இருந்தாலும் எங்களுக் கென்றே தனிச்சட்டங்கள் இருக்கும். குடுக்கையன் வளவுக்குள், சந்தாங்கேனி மைதானத்தில், கடல்கரை பள்ளி வெளியில், அல்லது தெருவில் அனல் பறக்கும். காலையில் விளையாடுவது என்றால் சற்று தொலைவில் உள்ள தமிழ் ஊர்களுக்கு செல்வது. எப்பொழுது எங்கே விளையாடினாலும் கடைசியில் சண்டையில்தான் முடியும், அல்லது இறுதியில் இரண்டு பேர் பேட்டிங் செய்யாமல் நாளை பார்கலாம் என்று முடியும்.

இரவில் படிப்பதற்க்கு நன்பர்களின் வீடுகளுக்குச் செல்வது. யாருமே இல்லாத வீடாக இருக்க வேண்டுமென்பது கண்டிப்பான சட்டம் என்றால், அங்கே படிப்பதை தவிர மற்ற எல்லாமும் செய்வது கண்டிப்பான வேலை. நள்ளிரவு வரை அரட்டை அடிப்பது, பக்கத்து வீடுகளில் மாங்காய் இளநீர் களவாடுவது, ராத்திரியில் கடல்கரை மணலில் போய் தூங்குவது, அல்லது இப்படிப் படிக்கும் நண்பர்களின் வீடுகளுக்குச் சென்று அரட்டை அடிப்பது.

என் உயர்தர இறுதிப் பரீட்ச்சை முடிந்தபின் அணுராதபுரத்தில் இருக்கும் நன்பனின் வீட்டுக்குச் செல்வதாக சொல்லிவிட்டு ஜந்து நாட்கள் இலங்கையின் மலைநாடு, தென்பகுதி என்று நகரூந்தில் சுற்றித்திரிந்து உம்மாவிடம் மாட்டிக் கொண்ட நாட்கள் எல்லாம் இன்றுவரையிலும் பசுமையாய்தான் உள்ளது. இங்கு வருவதற்க்கு ஒரு மாதத்திக்கு முன், சுதந்திரத்தின் எல்லைமீறி இலங்கையின் சில பகுதிகளுக்கு சுற்றிய நினைவுகளின் எச்சம்தான், என் நினைவுகள் சென்ற பாதை வழியே செல்வது, என் ஏகாந்தத்தின் சிதரல் நடு இரவுவரை விழித்திருக்கும் போது கண்ணீரும் மெல்லிய புண்ணகையும் முட்டி நிற்பது, இவை எல்லாமும் மீண்டுவர மனம் தகிப்பது.

என் ஊர்க் கவிஞன் சோலைக்கிளி என்று பெயர் ஒரு புத்தகத்திற்கு முன்னுரை எழுதியதில் ஒரு பகுதி இப்படி வணப்பாய்த் தொடங்கும்:

“நாம் றொட்டியும் சம்பலும் சாப்பிடுபவர்கள் அல்லவே! தயிரும் வாழைப்பழமும் போட்டு சோறு கரைத்து முழங்கையால் ஒழுகுவதைக் கூட நக்கிச் சுவைப்பவர்கள். அதன் ரசமும் ருசியும் நமக்குத்தான் தெரியும். திராய்ச் சுண்டலுடன் சோற்றை கமுகம் பட்டைக்குள் கட்டிவைத்து சிறுது நேரத்தின் பின் அவிழ்த்துச் சாப்பிட்டவன் நம் ஊரான். அதன் மனத்தில் மகிழ்ந்தவன். இவையெல்லாம் எதைக்காட்டுகின்றன? இயற்கையிலே லயித்து வாழ்ந்திருக்கிறான் எமது மண்ணின் மகன் என்பதையல்லவா? அதன் லயிப்பு நமக்குத் தேவையில்லையா? நாமென்ன பெயர் தெரியாத “ஹறாம்” குட்டிகளா? எவனெவனின் சாயலில்லெல்லாம் சிக்கிச் சீரழிய” என்று காட்டமாயும் அது முடியும்.

மழை பொழியும் மாரி காலத்தில் இரவுகளில் மெழுகுதிரி பற்றவைத்துக் கொண்டு மின்னலையும் அதில் தெறிக்கும் மழையின் குளிர்மையையும் அனுபவித்த நாட்களில் முடிகிறது என் நினைவு. என் ஈழத்தில் இருப்பவர்களும், என்னைப் போல் உலகம் பூராவும் சிதறி வாழ்கிறவர்களும், எங்கள் வாழ்வு முறையை, என் ஈழத்தின் வணப்பை, இந்த இயற்கையை, இந்த மண்ணை லயித்து வாழ்கிறோம் என்பதிலிருந்து தொடங்குகிறது நவீணத்தின் கறை.

இங்கு வெளிநாடொன்றில் தஞ்சம் அடைந்து சுமாராக ஒன்றரை வருடங்கள் கழிந்துவிட்டபின்னும், என் மனமும் ஆண்மாவும் இன்றளவிலும் ஆறாத துயரின் பாடலை தொடர்ந்து பாடியவண்ணமே இருப்பதன் காரணம், இங்குள்ள வாழ்வுமுறை நான் வாழ்ந்து பளகிய வாழ்வுமுறைக்கு முற்றிலும் வேறானவொன்றாய் இருப்பதனாலேயே, இங்கு சுற்றி இருப்பவை எல்லாமே என் ஆண்மாவோடு முறன்பட்டு இருப்பதனாலேயே.

இங்கு பச்சை நிறத்திலான வயல்கள் இல்லை, வெள்ளை நிறத்திலான மேகங்கள் கிடையாது, குளிர்மையான காற்று அதை தொடர்ந்துவரும் அடைமழை பெய்து கணநாளாயிற்று, சொந்த உறவுகளின் கொஞ்சலும் இல்லை சாவின் அழுகையும் இல்லை. காலையில் வேலைக்கு செல்வதும், மாலையில் சமைத்து சாப்பிட்டுவிட்டு தூங்கிக் கிடப்பதும், பின் மீண்டும் வேலைக்கு செல்வதும் என்று தொடர்கிறது நாட்கள்.

என் குடும்ப சுமையை ஏற்றுக் கொள்ளும் பொருப்பின் உணர்வுதான் இந்த வாழ்வை ஏற்றுக் கொள்ள நிர்பந்திக்கிறது. என் இயலாமைக்கு இந்த நிர்பந்தமே காரணமாகிறது. பொருப்புகள் மனித வரலாற்றில் வழி தொடர்பவைதான், ஆனால் இந்த நிர்பந்தம் யார் சொல்லித் தந்தது, இந்த நிர்பந்தத்தை, நிர்கதியான வாழ்வை எம்முள் திணித்தவன் எவன்.

அரசியல், ஜனநாயகம் என்ற சொற்கள் எல்லாம் இன்று பலகிய வார்தைகளாய் போய் விட்டது, எனினும் அதிகாரம் அங்கெதான் குவிக்கப்பட்டுள்ளது. உலகின் அனைத்து மொழிகளின் செய்திகளும் மனிதப் படுகொலைகள் உயிறிழப்புகள் பற்றியேதான் அதிகமாய் பெசுகின்றன, அரசு ஜனநாயக வழியில் அமைக்கப்படுகிறது, ஆனால் அது உயிறிழப்புகளால்தான் ஜனநாயகம் பெசுகிறது.

பண்டைய நாகரீகங்களில் எதேட்சதிகாரத்தினால் அதிகாரம் பெரப்பட்டது. அதன்போது அப்பாவி மக்களின் உடமை, ரத்தம், உயிர் வகைதொகையின்றி அழிக்கப்பட்டது. காரணம் ஒன்றுதான், எவன் அதீத பலசாலியோ அவனுக்குத்தான் அதிகாரம் சொந்தமானது. இந்த தனிமனித அதீத அதிகார மையத்தினை தகர்த்து மக்களின் கைகளில் அதிகாரம் இருக்கவேண்டும், மக்களே தங்களை ஆழவேண்டும் என்ற கொள்கையின் அடிப்படையில் போறாட்ட குழுக்கள் தோன்றி, பின் அது கட்டமைக்கப்பட்டு நாகரீகமான வழிமுறைகளிலும் ரத்தம்சிந்தியும் போறாடியதன் பிற்பாடுதான் அதிகாரம் மக்கள் மயப்படுத்தப்பட்டது. இதுவொன்றும் பலநூற்றாண்டுளுக்கு முன் நடந்தவையல்ல ஒன்று அல்லது இரண்டு நூற்றாண்டுளுக்குள் நடந்தவை.

“மக்களால் மக்களை ஆழ்வது” இதுதான் அரசியலின் அடிப்படைத் தத்துவம், இதற்காக மக்கள் மன்றங்கள் அமைக்கப்பட்டன, இந்த மன்றங்களில் மக்கள் அனைவரும் சென்ரமற இயலாததன் நடைமுறை சிக்கலில்தான் மக்களின் பிரதிநிதிகள் உருவானார்கள், இவர்களே மக்களின் அபிப்பிராயங்களை தேவைகளை நடைமுறைபடுத்துபவர்கள், இந்த மக்கள் பிரதிநிகளை வழிநடத்தவே முதன்மை பிரதிநிதி அல்லது ஆட்சித் தலைவர் தெரிவுசெய்யப்பட்டார். இந்த சிக்கலில்லாத நடைமுறையில் நீதிதான் அடிப்படை, அதற்காய்தான் சட்டங்கள் ஏற்றப்பட்டன, இந்த சமூக நீதியை பாதுகாப்பதே அரசின் முதல்பனி. இதுவே அரசியல் தத்துவமாகக் கொள்ளப்படுகிறது.

சற்றுச் சிந்தியுங்கள், ஜனநாயக அரசு அமைக்கப்படுவதற்கு முன் இந்த உலகில் தொழில், வர்தகம், நாளாந்த சமூக செயற்பாடுகள் நடக்கவே இல்லையா? மக்கள் அரசு அமைக்கப்பட்டதன் பின்னர்தான் இவையெல்லாமும் உலகில் தோன்றியதா? இது மக்கள் ஆட்சி (The Republic Government) என்று கொட்டை எழுத்தில் தன்னை அடயாளப்படுத்தும் அரசுகளின் இன்றைய பக்கங்கள் ரத்தக்கறை படிந்ததாகவே உள்ளதன் மர்மம் என்ன?

சுதந்திர பாலஸ்தீனத்தில் யூத குடியிருப்பு அமைக்கப்பட்டு இந்த ஆண்டுடன் 72ஆண்டுகள் கழிகிறது. பொஸ்னியா, செச்சின்யா போன்ற நாடுகளில் இனப்படுகொலை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை பத்து லெட்சம் என செய்திகள் கசிகிறது. இந்திய அரசும் பாக் அரசும் கஷ்மீர் மக்களை அடிமைப்படுத்தி படுகொலை செய்தவர்களின் எண்ணிக்கை இரண்டு லெட்சத்தை தாண்டுகிறது. அதே இந்திய அரசு மலைவாழ் மக்களின் குடியிருப்பு நிலங்களில் மேலைத் தேய நிறுவனங்கள் என்ற போற்வையில் சொந்த மக்களின் பூர்வீக குடியிருப்புகளில் பெருமுதலாளிகளின் குப்பைகளை கொண்டுபோய் கொட்டுகிறது.

தீவிரவாத எதிர்புப் போர் என்ற தொனியில் அமேரிக்காவின் கைபிள்ளைகளான, பாக் அரசு, அதன் உளவுப்பிரிவு, ஆப்கான் அரசுகளுடன் சேர்ந்துகொண்டு தன் சொந்த மக்களை தீவிரவாத வலைபின்னலில் சிக்கவைத்து, தன் சொந்தச் சகோதரனையே கொலைசெய்து, தன் வல்லாதிக்க வண்மப்புத்தியை அமெரிக்கா நிலைநிறுத்துவதாக அன்மையில் வெளியான விக்கிலீக் சுதந்திர இணையத்தள ஊடகம் அறிவித்தது. இதனைத் தொடர்ந்து தலிபான் கிளர்சியாளர்களும், ஒசாமாவும் சி.ஐ.ஏ யின் கைக்காசு கொடுக்கப்பட்ட கூலிக்கொலைகாரர்கள் என்று பிடல்கஸ்றோ தற்போது சொல்கிறார். இதேவேளை கற்பழிக்கப்படும் பெண்கள் தொகை அதிகமாக உள்ள நாடுகளின் பட்டியலில் ஆப்கான் முதலில் உள்ளது. இந்த உலகில் பாதுகாப்பற்ற நாடுகளின் முதல் நாடு பாக்கிஸ்தானாக உள்ளது.

ஈராக் யுத்தம், வடகொர்ய தென்கொர்ய எல்லை பிளவு, ஆப்கான் யுத்தம், ஆபிரிக்க இனமுறுவல், பல நாடுகளில் நடக்கும் உள்நாட்டு யுத்தங்கள் இவை அத்தனைக்குமான முழுமுதல் காரணம் அமேரிக்க, யூத, ரஷ்ய, மற்றும் பெறும் செல்வந்த நாடுகளின் ஆயுத உற்பத்தியும் அதனால் கிடைக்கும் கருப்புப் பண முதலைகளுமே. கொங்கோ குடியரசிலும், அதனை சுற்றியுள்ள ஆபிரிக்க நாடுகளில் இடம்பெரும் நாளாந்த மனிதப் படுகொலைக்குமான முக்கிய காரணம் ஐரோப்பிய நாடுகளால் கடத்தப்படும் வெள்ளை வைரக்கற்களே. இந்தப்பட்டியலின் நீளமும் கண்ணீரின் கணமும் அதிகமானது. இவையெல்லாமும் ஜனநாயக அரசுகள் செய்த எதேட்சதிகாரங்கள்தான், அதிகாரமீறல்கள்தான். இவையெல்லாமும் இன்றைய தேதிகளில் வெறும் செய்திகளாய் மாறிவிட்டது.

மேலைத்தேயவனுக்கும் கீழத்தேயவனுக்கும் இடையில் உள்ள தொழில்நுட்ப இடைவெளி மூன்று தசாப்தம் என்று ஒரு அறிக்கை சொல்கிறது. இன்னமும் நம் கல்விக் கொள்கைகளில் பழய பிரிடிஷ் காரனின் ஈக்களே பறக்கிறது. நம்மால் தொலைக்கப்பட்ட வரலாறுகளிலிருந்து கற்றுக்கொள்ள நிறையவே பாடங்கள் இருந்தும், நாம் நம்மில் இருக்கும் பிழைகளை துடைத்தழித்து பின்னர், ஒரு புதிய மாற்று அதிகார மீறல்களை உருவாக்கிக் கொண்டும், அதற்காய் ஒரு புதிய நாளினை வரவேற்றுக் கொண்டும் இருக்கிறோம்.

இவைகளை எதிர்த்து குரல் கொடுக்க, காட்டமாய் போராட நம்மில் ஒரு போராளி இல்லை, நம் வாழ்வின் நிர்பந்தம் இதனை தடுக்கிறது. புரிந்துகொள்ளுங்கள் நவீணம் நிர்பந்தங்களால்தான் எங்களை ஆள்கிது.

இங்கே கட்டாரில் நேற்று ஒரு நபரை சந்தித்தேன், வயது முப்பத்தைந்துக்கு மேலிருக்கும் கட்டடநிர்மாணப் பணியில்தான் வேலை என்றும், தற்பொழுது சம்பளம் பரவாயில்லை என்றும் இன்னுமொரு தங்கைக்கு திருமணம் நடந்து விட்டால் தான் நாடு செல்ல இருப்பதாகவும் சொன்னார். உங்களுக்கென்று ஏதாவது சேர்த்திருக்கிறீர்களா என்றேன், இல்லை என்றார். சடுதியாக தனக்கு திருமணம் பேசியுள்ளதாகவும் பெண்வீட்டிலிருந்து சீதணமாக வீடும் கொஞ்சப் பணமும் தருவதாக சொல்லி இருக்கிறார்கள் என்றுவிட்டு இறுதியாக, என் இளமையும் காலமும் இங்கே எத்தனை காலத்திற்கு வீனாய் கழிவது என்று பெருமூச்சுடன் பிரிந்து சென்றுவிட்டார். அவர் யார் என்றோ அவரின் முகவரி என்ன என்றோ எனக்குத் தெரியாது, ஆனால் இவரின் கதைபோல் லட்சோப லட்சம் கதைகள் இன்னும் எழுதப்படாமல் பேசப்படாமல் இங்கே உள்ளது.

இங்கு வருவதற்கு ஓரிரண்டு வருடத்திற்கு முன் ஐக்கிய ராஜ்சியத்தின் நுளைவு அனுமதி பெற்றுத் தருவதற்கு, ஐக்கிய ராஜ்சியத்தின் குடியுரிமை பெற்ற இலங்கையை சேர்ந்த ஒருவரை சந்தித்தேன், இருவரின் பேச்சினிடையில் அவர் சொல்கிறார், இங்க வாழ்க என்ன அங்க வாழ்க என்ன, அது றோயல்டி லைஃப் அப்பா, நீங்களும் றை பன்னுங்க என்றார். என் நன்பனொருவன் லண்டனில் இறுக்கிறான், நாங்கள் பேசும் போது அடிக்கடி அவன் இதனைச் சொல்வான், உழைக்கிறத உழைச்சிட்டு நாட்டுக்கு போகனும்டா மச்சான், இங்க பதினான்கு மணிநேர வேலை கொட்டிற பனியில காலை நான்கு மணிக்கெல்லாம் வேலைக்கு போகனும், நிம்மதி சந்தோஷம் எல்லாம் தொலைஞ்சி அழிஞ்சி போய்சிடா.

இப்போது என் ஊரில் மழைக்காலம் ஆதலால், என் வீட்டுத் தகரக் கொட்டிலில் விழும் சந்தங்களை கேட்டுக் கொண்டே பூனைகள் சில கண்ணயர்ந்திருக்கும். பின்காலையின் வயல்கள் முழுவதும் பனிமூடிக்கிடக்கும். ரசிப்பதர்க்கு மனிதர்கள் இருக்கிறார்களோ என்னமோ. நாளையும் நாளைகழிந்து தொடரும் இறப்புக்களுக்கு நடுவிலும் சின்னத்திரை மெகாத் தொடர்களில் அழுது முந்தானை துடைக்கும் உன் அம்மாவும் என் அக்காளும் நினைவுக்கு வருகிறார்கள் இப்போது, ஏனோ தெரியவில்லை!

-yousuf salman-
(Tuesday31,August2010)

Friday, June 4, 2010

இரக்கமற்ற இரவின் நீர்சலனமற்ற பொழுதுகள்

காதல், ஆண்மா, உயிர்ப்பு, மனிதம் இவையெல்லாமும் கொண்டு அலைதலே வாழ்வின் அர்த்தமான நிமிஷங்கள் என்பதில் கருத்து முறனில்லை. ஆனாலும் ஏனோ காதல் பற்றியெல்லாம் எழுத, அல்லது காதலுக்காக அலைந்த நாட்கள் என்றெல்லாம் என்னிடம் இல்லை. வாழ்வின் முறன் அன்றே ஆரம்பமாகிவிட்டது போலும்.

ஆனால் ஏனோ நேற்று, புதிதாய் வயதுக்கு வந்தவன் மாதிரி அவள் பற்றிய கிறக்கத்தில் அலையத் தொடங்கிவிட்டேன், அவளை நான் கண்டது கிடையாது, கனவுகளில் வரும் அவள் நிஐத்தில் நிச்சயமாய் காண்பேனா என்றுகூடத் தெரியாது, அவளின் ஸ்பரிசம் மெல்லமாய் தொடங்கிவிட்டது இந்தக் காதல் கவிதையொன்றால். குல்முகர் மலர் பூத்ததிலிருந்து நூராண்டுகள் வரை தொடர்ந்து பூக்குமாமே!


என்னுள் ஊர்வது உன் உயிர்

உன் மூச்சுக்காற்றின் மென் உரசல்
இன்னும் என்னுள் சுடுகிறது
என்னுள் தீராக்கனவென அலைபவளே, என் அன்பே!
நீ நிலவென அலைகிறாய்
நான் இரவெனத் தேய்கிறேன்

உன் நிறம் போலும் உன் மொழிபோலும்
என் பெருநிலத்தில் ஊர்கிறதுன் உயிர்

இரவின் தனிமையில்
என் நிமிஷங்களை தொலைக்கையில்
துலங்கியதென் உயிர்

மௌனங்களால் சண்டை செய்து
துரத்தி எனை அலையவிட்ட நாட்களுக்கு இங்கிதம் தெரியாது
சண்டைக் கோழிபோல் மல்லுக்கு நிக்கிறது

மிருதுவான உன் சிரிப்புக்கும்
என் நகம் கடிக்கும் உன் இதழ்களுக்கும்
சிலிர்த்து விட்டுச் செல்லும் உன் கூந்தலுக்கும்
பசித்தலையும் காணகத்து மிருகமென அலைகிறேன் நான்

மெல்லிய காலைப் பொன் வெய்யில்
என் உடல் சுடுகையில்
உன் மென் உரசல் உணர்கிறேன் நான்

நம் நற்பின் இடைவெளியில்
புணர்கிறது நம் காதல்.

(yousuf salman)
19 may 2010

Saturday, March 27, 2010

அன்பின் உயிர்மெய் தாய்

காட்டுப்பிரியத்துடன்…

என் புரிதலின் நின்றும் என் தாய் பற்றிய மனப்பதிவுகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். வாழ்கையின் எல்லைகள் கடந்து பயணிக்க நினைத்தவன்தான். ஆனாலும் வாழ்வின் எதார்தமும், வாழ்வாதாரப் பிரச்சினைகளும் சிறைகளாய் என்முன் நிற்கிறது. இப்போதெல்லாம் நீண்ட, மிக நீண்ட இரவுகலில், மனம் நினைவுகலை அடுக்கி வைத்து பிரித்துப் பார்க்கிறது. நான் இழந்தவை மிக அதிகமாய் உள்ளன, அத்தனை இழப்புக்களையும் பாடி முடித்து பின்னும், வாழ்வின் மீதான நம்பிக்கைகள் எட்டாத் தொலைவிலேயே கிடக்கிறது. அத்தருணம் என் தாயே நம்பிக்கைகளின் பிறப்பிடமாக இருக்கிறாள்.

பனிஇடை காடுநீக்கி
நீண்டோடுகிறது சிறுஓடை
சோகம் கப்பிய மலைக்காடு

நிழழும் நிழழ் படும் வெயிலும்
மரமும் நிழல் தரும் சுகமும்
காட்டுவழி ஒற்றைப் பாதை

செந்தீ விழுங்கும் மேற்கு வானம்
வெண்மை போர்திய இரவு
இரவும் நிலவும்
நானும் அவள் நினைவும்

கூடு கட்டிய மரங்கள்
துயரென வந்தது புயல்
கூடும் இல்லை மரமும் இல்லை

என் தந்தையின் மறணத்தின் இறுதி ஓலங்களில், அவர் அவருடைய பிரிவு பற்றிய ரணங்களோடும் அன்பின் காயங்களொடும்தான் வாழ்ந்தார். வெறுமையான வெளியை பார்த்துக் கொண்டும் தன் இயலாமை பற்றிய கசப்பான நினைவுகளோடும்தான் அவரை நான் இறுதியாக பார்த்தது. அப்போதெல்லாம் அவருடைய அன்பின் வெறுமையை என்னாள் உணர முடிந்தது. அதனால்தான் அவரைப்பற்றி நினைக்கையில் நான் அழுதே விடுகிறேன். அந்த அன்பின் மிச்சத்தை நினைவுகளாய் அவர் எனக்கு தந்திருக்கிறார்.

இந்த இழப்பின் பின்னர் என்னுடன் வாழும் ஜீவன் என் தாய், அவள் பற்றிய நினைவுகளிள் நான் சில இரவுகளில் இறந்தே விழித்திருக்கிறேன். அவள் அன்பை நான் இவ்வாறுதான் உணர்கிறேன்.

“சின்னஞ்சிறு மழலையாய்
என்
தாயின் மடியில் நான்
தவழ்ந்த காலையில்
நான் உணர்ந்து வைத்திருந்தது
ஒன்றே ஒன்றுதான்:

“இந்த உலகம்
என் தாயின் மார்பகத்தை விட
பெரிதில்லை”

வளர்ந்தேன்!
சீனத்து மண்ணையெல்லாம்
கால்களால் கடந்தேன்!

சாங் ஜாங்கையும்
மஞ்சள் நதியையும்
என்
இடுப்புக்குக் கீழே
ஓடவிட்டேன்!

இவ்வளவுக்குப் பிறகும்
இப்போதும் சொல்கிறேன்:

“இந்த உலகம்
என் தாயின் மார்பகத்தை விட
பெரிதில்லை”
-ராகுவாய் பசாங்
(சீன தேசம்)



போன றூற்றாண்டில் ஒரு கவிஞனின் மறைவுக்காக உலகமே கண்ணீர் வடித்தது அவனுக்காக மட்டும்தான் அவன்தான் கலீல் ஜிப்ரான்-மானுடத்தின் குரலாக ஒலித்த மகா கவிஞன். வாழ்கையை வாழ்கைக்கு உள்ளேயிருந்து பார்காமல் வாழ்கைக்கு வெளியே இருந்து பார்தவன். அவன் தன் தாய் பற்றி 'முறிந்த சிறகுகள்' எனும் தொகுப்பில் இவ்வாரு எழுதுகிறான்.

நீ பூமியில் பிறக்காமல் இருந்திருந்தால்
ஒரு தேவதையாய் இருந்திருப்பாய்
என்றார் என் அம்மா.

“இப்போதும் நான் தேவதைதான் என்றேன்”

“தேவதையானால் சிறகுகள் எங்கே?”
அம்மாவின் கைகளை என் தோள்களில் தூக்கிப் போட்டுக் கொண்டு
சொன்னேன்:

“இவைதாம் என் சிறகுகள்”
அப்போது அம்மா சொன்னார்:

“இப்போது அவை
முறிந்த சிறகுகள்”

கலீல் ஜிப்ரானின் வரிகளோடும் என் தாய் மீதான காட்டுப்பிரியத்தோடும்.

-yousuf salman-

Thursday, March 11, 2010

துயர்மிகு பாடலொன்றினை பாடுவேன் உனக்கு

திருமாவளவனின் 'இருள் – யாழி' எனும் மூன்றாவது கவிதைத் தொகுப்பின் ஏதோவொரு பக்கத்தில் காணக்கிடைத்த ஒரு சிறு எழுத்தின் பகுதிதான் இந்தப் பதிவை எழுதத் தூண்டியது.

அதன் பகுதி வருமாறு; 'மனசு மகிழ்ந்து விரியும் கணங்களில் சடுதியில் புகுந்து அழித்துவிட்டுப் போகிறது கடந்தகாலத் துயரங்களின் கொடு நினைவு'.

துயர்மிகு பாடலொன்றினை பாடுவேன் உனக்கு

சுதந்திரமாய் பறக்கும்
வெண்நிறமான
பறவையொன்றினை
நீ நிச்சயமாய்
கண்டிருப்பாய்

சிறகுகள் இருந்தும்
சிறைபடாமல் இருந்தும்
எல்லாம் இருந்தும்
பறக்க முடியவேயில்லை

பெருநிழலாய் தொடரும்
நினைவுகளின் உயிர்
மனம் கிடந்தழும் வாழ்வாயிற்று என்வாழ்வு
துயர்மிகு பாடலொன்றினை பாடுவேன் உனக்கு

ஊசியிலை காடுகளினுள்
ஈரம் செறிந்த காரிருலினுள்
யாருமற்ற தனிமையில் அழுமே
அந்த ஒற்றை நிலா

தெருமுனையில்
யாருமற்ற வெளியில்
குப்பையினுள்
முகம் புதைத்தழுவானே
யாறோவொரு அனாதைப்பயல்

வானில்
நட்சத்திர வெளியில்
எது என்னவளின் பாடல்
என ஏங்கித்தவிப்பானே
இருளின் காதலன்

இவை எல்லாமும் என்பாடல்தான்

நீலமான கடலும்
பச்சையான வயலும்
புழுதிபடிந்த நிலமும்
அந்த நிலத்தின் மனிதனும்
என்று விட்டு வர
என்னால் எப்படி முடிந்தது

தாயின் முகம் அறியா வேதனை
அனிச்சையான சாபமோ
இல்லை இச்சையான பாவமோ

முடிவதாய் இல்லை
பெருநிழலாய் தொடரும்
நினைவுகளின் உயிரும்
தனிமையின் இசையும்

மனம் கிடந்தழும் வாழ்வாயிற்று என்வாழ்வு
துயர்மிகு பாடலொன்றினை பாடுவேன்
நான் உனக்கு...

- yousuf salman -
Time 05:10 AM